Spontaneous Innovative Minds—>SIM

Creativity, Originality, Persistency.

பாட்டி சுட்ட வடை – பாட்டி ரிட்டர்ன்ஸ்

Posted by ~Joel.red~ on February 24, 2011

பாட்டி வடை சுட்டதையும் அதை காக்கை சுட்டதையும் அது கிட்ட இருந்து நரி சுட்டதையும் சின்ன வயசுலேயே கேள்விப்பட்டு இருப்பீங்க(இப்படி மாறி மாறி சுட்டுக்கிட்டாங்களே யாரும் சாகலையான்னு கேக்ககூடாது). சரி இப்ப எதுக்கு பழைய பஞ்சாங்கம்னு நீங்க கேக்கலாம், அங்க தான் விஷயமே இருக்கு. பொதுவா இந்த பாட்டி வடை சுட்ட கதைக்கு இரண்டு  கிளைமாக்ஸ் இருக்கு, ஒரு சிலர், காக்கை வடையை வாயில வச்சுட்டு பாடினதாகவும் அப்ப வடை கீழே விழுந்ததால் நரி தூக்கிட்டு போய்விட்டதாகவும் சொல்வாங்க, வேறு சிலர் காக்கை வடையை கால்ல பிடுச்சுட்டு பாடினதால் நரி ஏமாந்து போனதாகவும் சொல்வாங்க.

எப்படி சொன்னாலும் கதையை கேட்டுட்டு போய்விடறதா? கதைக்கு ஒரு நீதி வேணாமா? முதல் கிளைமாக்ஸ்ல காக்கைக்கு தண்டனை கிடைச்சுது ஆனா காக்கையை ஏமாத்தின நரிக்கு தண்டனையோ, வடையை பறிகொடுத்த பாட்டிக்கு நீதியோ கிடைக்கல!! இரண்டாவது கிளைமாக்ஸ்ல, காக்கையை ஏமாற்ற நினைத்த நரி ஏமாந்து போச்சு ஆனா இங்கேயும்  பாட்டிக்கு நீதி கிடைக்கலையே!! தமிழ் நாட்ல எத்தனை பேர் இருக்கோம், யாரவது ஒருத்தராவது பாட்டிக்கு நீதி கிடைக்க எதாவது செஞ்சிருக்கோமா?? பாவம் அந்த பாட்டி இந்த தள்ளாத வயசுல கஷ்டப்பட்டு உழைச்சு சாப்பிடனும்னு நினைக்கின்றாங்களே அதை பார்த்தாவது யாருக்காவது பரிதாபம் வந்துச்சா?
சரி நடந்தது நடந்து போச்சு, காலம் கடந்தாலும் இப்பயாவது பாட்டிக்கு ஒரு நல்லது செய்வோம். பாட்டிக்கு நீதி கிடைக்க வேண்டி காலம் காலமாக சொல்ல பட்டு வந்துள்ள இந்த கதையின் மூன்றாம் பாகம் இங்கே, இந்த கதை மூலம் பாட்டிக்கு நீதி கிடைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் சொல்லி கொள்கிறேன்

வடையை பறி கொடுத்த பாட்டி ரொம்ப சோகமா ஆயிட்டாங்க, என்னைக்காவது அந்த காகம் என் கைல கிடைக்காமலா போய்விடும்னு நினைச்சு மனச தேற்றிக்கிட்டு அடுத்த நாள் வடை சுட தேவையான பொருட்கள் வாங்க காட்டு வழியா அடுத்த ஊருக்கு கிளம்பி போனாங்க.
அங்கே காட்டுல நரிகிட்ட வடையை பறி கொடுத்த காகம் ஏமாற்றத்தோடயும், கோபத்தோடயும் ஒரு மரத்துமேல உட்கார்ந்து அந்த நரியை எப்படி பழி வாங்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தது. ரொம்ப நேரம் யோசிச்ச காகத்திற்க்கு ஒரு யோசனை தோன்றியது, அதன்படி இதுவரை உழைத்தே பழக்கமில்லாத அந்த காகம், முதன்முறையாக தானே ஒரு வடையை சுட்டது(எப்படி சுட்டுச்சுனு எல்லாம் கேட்ககூடாது, எனக்கு சொல்ல தெரியாது). வடையை சுட்டு, அதுக்குள்ள சயனைடை வைத்தது. பின் தான் வழக்கமாக உட்காரும் அதே மரத்தில் உட்கார்ந்து, நரியின் வரவை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தது.

அந்த சமயம் காட்டு வழியாக போய்க்கொண்டு இருந்த பாட்டி, இந்த காகத்தை பார்த்து விட்டார்கள். கோபம் பொத்து கொண்டு வந்தது பாட்டிக்கு, என்ன தைரியம் உனக்கு, என்னோட வடையை திருடிட்டு, இப்ப ஜம்முனு உட்கார்ந்து இருக்கியா, இன்னைக்கு நீ தான் எனக்கு விருந்துனு சொல்லி காகம் உட்கார்ந்து இருந்த மரத்துக்கு பதுங்கி பதுங்கி போனார்கள். அங்கே காகம் நரி வரும், வடையை பார்த்துட்டு பாட்டு பாட சொல்லும், நான் பாடுவேன், வடை கீழே விழும், நரி சாப்பிடும், அப்புறம் நரி காலி என்று பக்கா யோசனையுடன் உட்க்கார்ந்து இருந்தது, பாட்டியை காகம் கவனிக்கவே இல்லை.
பதுங்கி வந்த பாட்டி, மரத்தின் மேலே சந்தடி இல்லாமல் ஏறி, காகம் அசந்த நேரம், கப் என்று காகத்தை ஒரே அமுக்காக அமுக்கிவிட்டார்கள். காகம் காஆஆஆ… என கதரியது, வடை கீழே விழுந்தது. அந்த காகத்தை பையில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு சென்று காக்கா-65 செய்து சாப்பிட்டு விட்டார்கள். பாட்டி போன பிறகு அங்கு வந்த நரி காகம் சுட்ட அந்த வடையை கவ்வி தின்றது, அய்யகோ அந்த வடையில் சயனைடு இருந்ததால் நரியும் பரிதாபமாக இறந்தது. பாட்டி  அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?
நீதி: பாட்டியை ஏமாற்றி வடையை திருடி தின்ற காகத்திற்கும் தண்டனை கிடைச்சாச்சு , காகத்தை ஏமாற்றிய நரிக்கும் தண்டனை கிடைச்சாச்சு. எப்புடி ???

பி.கு  உங்களோட உணர்வுகள் எனக்கு புரியுது,  Cool down, Cool down !!
பி.கு 2 : இப்படி நீதி வழங்கப்படாத கதைகள் வேறு ஏதாவது இருந்தா சொல்லுங்க, நாமலே தீர்ப்பு சொல்லிரலாம்.

One Response to “பாட்டி சுட்ட வடை – பாட்டி ரிட்டர்ன்ஸ்”

  1. Ramkumar said

    Enkitta oru kelvi irukku…:)Pidichirundha theerppu sollunga illaatti aapdiye vidunga….

    Pulli raja ku aids varumaa?

Leave a comment